நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

“தாய் சொல்லைத் தட்டாதே”

3/12/09

தாயுமானவன் சாரு கேக்குறாரு. நான் எளுதி இருக்கேன். இணெப்பெத் தொறந்து பாருங்க.
நன்றி. வணக்கமுங்க.
நடராஜன் கல்பட்டு
-----------------------------------------------------------------------
“தாய் சொல்லைத் தட்டாதே” ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதெப் போல “தாயு சொல்லெத் தட்டாதே” ன்னு இதெ எளுதறேனுங்க. (அதாங்க தாயுமானவங்கற பேரெ சில ஊடுங்கள்லெ செல்லமா, “தாயூ... தாயூ” ந்னுதான் கூப்பிடுவாங்க இல்லியா?)
நான் ஏளாம் வகுப்பு வறெக்கும் பொன்மலெ ரயில்வே ஸ்கூல்லெ படிச்சேங்க. நாலாங்கிளாசுலெ மணி ஐயர்னு ஒரு வாத்தியாரு. அவரு இன்னும் அஞ்சாறு வாத்தியாருங்க மாதிரி சைகிள்லெ தான் வருவாரு. வருஷ ஆரம்பத்துலெ கிளாசுக்கு மானீடர்னு நல்ல வாட்ட சாட்டமா இருக்குற ஒரு பையனெத் தேர்ந்து எடுப்பாரு. அந்தப் பையனோட வேலெ ஆபீசு ரூமுலேந்து சாக்கு பீசு டப்பா வாங்கியாந்து கொடுக்கறது, போர்டெ அழிச்சு க்ளீனா வெக்கெறது, அப்பொப்பொ வாத்யார் சொல்ற வேலெயெச் செய்யறது. அதாவது வாத்தியார் பாடம் நடத்துறபோது பெசிகிட்டு இருக்குற பையங்க தலெலெ ஒரு குட்டு வெய்க்கறது. இப்படிப் பல வேலெ. ஆனா இது எல்லத்தையும் விட ஒரு முக்கியமான வேலெ காலெலெ வாத்தியார் வந்த ஒடனே அவரு சைகிளெத் தினமும் தொடச்சு வாரத்துலெ ஒரு நாள் எண்ணெ போடறது.
அந்தெ பள்ளிக்கூடத்துலெ வேறெ சில வாத்தியாருங்க கிட்டெ புது சைகிள் கூட இருந்திச்சு. ஆனா மணி ஐயரு சைகிள்தான் எல்லாரு சைகிளையும் விட பள பளன்னு இருக்கும். நல்லாவும் ஓடும். அவரப் பாத்து கத்துகிட்ட இந்த விசயத்தெ நானும் எங்கிட்டெ ஆறாங் கிளாசுலேந்து பியெஸ்ஸி வறெ வெச்சுகிட்டு இருந்த சைகிளெ நல்லா தொடச்சு எண்ணெ போட்டு வெச்சுக் கெறதுலெ கடெ புடிச்சேனுங்க.
அப்பாலெ கான்பூருலெ வேலெக்கிப் போனப்பொ ஒரு சைகிள் வாங்கினேன். அதெயும் தொடெச்சு அப்பொப்பொ எண்ணெ போட்டு வெச்சிகிட்டு இருந்தேனுங்க. அந்தெ சைகிளெ ஊட்டுக்கு வெளியெ வெய்க்கெறது இல்லீங்க. என் கயித்துக் கட்டிலுக்குப் பக்கத்துலேயெ வெச்சுக்குவேனுங்க. எங்கூட இருந்த இன்னோரு
ஆளு கிண்டல் பண்ணுவாருங்க. “என்ன சைகிளுதான் ஒம் பொஞ்சாதியா? கட்டிகிட்டெ தூங்குவெ போலெ இருக்கே?” ன்னு.
பொஞ்சாதியோ, சைகிளோ இல்லெ நம்ம ஒடம்பொ நாம நல்லா பாத்துகிட்டாத் தானுங்களெ அதுங்களும் நமக்கு நல்ல ஒத்தாசையா இருக்கும்?
நம்ம ஒடம்பும் சைகிள் மாதிரி தானுங்க. நட்டு, போல்ட்டு, ஜாயின்டு, சக்கரம், ட்யூபு, டயருன்னு வெளிப்படையாத் தெரியாட்டியும் இதெல்லாம் உள்றெ இருக்குதுங்க. இல்லாடி இப்பிடி நாமெ ஓடி ஆடிகிட்டு இருக்க முடியுங்களா? அதுக்கும் அப்பொபொ எண்ணெ போட்டு வெச்சுகிட்டாத்தான் நல்லா ஒடுங்க.
ஆதி காலத்துலேந்து நம்ம நாட்டுலெ வெள்ளி கெளெமெ பொம்பளைங்களும் சனிக் கெளெமெ ஆம்பிளைங்களும் எண்ணெ சீயக்கா தேச்சுக் குளிக்கறாது பளக்கங்க. அப்படி எண்ணெ சீயக்கா தேச்சுக் குளிக்கெறதுனாலெ ஒடம்புக்கு, முக்கியமா சருமம், முட்டிங்க இன்னும் மத்த மூட்டுங்க, தலெ மயிரு இதுக்கெல்லாம் வேணூங்கெற போஷாக்குக் கெடெய்க்குதுங்க. பொம்பிளைங்க தலெ மயிரும் சிடுக்காகாமெ இருக்குங்க.
இப்பொல்லாம் டீவிலெ ஒரு வெளெம்பரம் காமிக்கிறாங்க. ஒரு தலெ துவட்டுற துண்டுலெ நெறெய மயிரெக் காட்டி, “நீங்க இப்பொ ஒபெயோகிக்கிற ஷேம்பூனாலெ மயிரு இப்படிக் கொட்டுதா? எங்க கம்பெனி ஷேம்பூவெ உபயோகிங்க. மயிரு கொட்டாது” ன்னு. மயிரு இருந்தாத் தானுங்களே கொட்டறத்துக்கு? அதுதான் கண்ட ரசாயனப் பொருளுங்க கலந்த ஷேம்பூக்கெளெ ஒபயோகிச்சு கொஞ்சம் கொஞ்சமா கொறெஞ்சுகிட்டே வருதுங்களே.
நான் சுமாரா இருபத்தஞ்சு முப்பது வருஷம், அதாங்க ஆத்தா கூட இருந்த வரெக்கும், எண்ணெ தேச்சுக் குளிக்கிற சுகத்தெ அனுபவிச்சிருக்கேனுங்க. எண்ணெ தேச்சுக் குளிச்சன்னிக்கி மத்யானம் ஒரு தூக்கம் வரும் பாருங்க அந்த மாதிரி சுகமான தூக்கம் காசு கொடுத்து வாங்கற தூக்க மாத்திரெ சாப்பிட்டக் கூட வராதுங்க.
இப்ப எண்பது வயசுலெ தோல் வியாதிங்க வந்து அவஸ்தைப் படுறேனுங்க. மார்சு மாசத்துலேந்து அக்டோபர் நவம்பர் வரெ வெளிலெ தல காட்ட முடியறது இல்லீங்க. மின் விசிறிக்கு முன்னாலேந்து நகர முடியறது இல்லீங்க. டாக்டரு கிட்டெ போனா அவரு சொல்றாரு, “ஒங்க தோலுலெ கொழுப்புச் சத்தும் ஈரப் பதமும் இல்லெ. காலெல்லாம் பாருங்க சுண்ணாம்புக் காளவாய்லெருந்து வந்தாப்ப்ளெ இருக்குக்கு. இந்த லோஷனெ வாங்கி ஒரு நாளெக்கு மூணு நாலு வேளெ ஒடம்பு பூராத் தடவிக்கோங்க” ன்னு. ஒரு சீட்டு எளுதிக் கொடுத்தாரு. மருந்தெ வாங்கிட்டு வந்து அதுலெ என்னல்லாம் இருக்குதுன்னு பாத்தா ஆலிவ் எண்ணெ 3 சத வீதம், 0.25 சத வீதம் ஒரு சோப்பு மாதிரியான ரசாயனப் பொருளு, 96.75 சத வீதம் தண்ணி. வெலெ கொஞ்சமா 115/- ரூவாங்க ஒரு 100 மில்லி பாட்டுலுக்கு. அதாவது ஒரு டீஸ்பூனெ விடக் கொறெவான 3 மில்லி எண்ணெ 115/- ரூவாங்க!
ஒளவைப் பாட்டி சொன்னாப்புளெ தவறாமெ சனி நீராடியிருந்தா (சனிக் கெளெமெ சனிக் கெளெமெ எண்ணெ தேச்சுக் குளிச்சிருந்தா) இப்பொ இப்படி டாக்டரு ஊட்டுக்கும் மருந்துக் கடெக்குமா ஆடிகிட்டு இருக்க வாணாமோ என்னமோ?

நடராஜன் கல்பட்டு

0 Comments: