நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

கரகாட்டம் வெறும் ஆட்டமல்ல

3/12/09

சகஸ்ராரத்தைப் பற்றி பேசுகையில் கரகாட்டத்தைப் பற்றிப் பேசாமல்விட்டால் நம் ஆதி தமிழர்களுக்கும் அவர்தம் பொருண்மைகளுக்கும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். தமிழரின் ஒவ்வொரு பழஙகலையும் சாதாரணமானதல்ல. வாழ்வியலின் நகரும் போக்கில் விளையாட்டாய் சொல்லிவைத்தது மட்டுமல்லாமல் அதை கண்முன்னேயும் நிகழ்த்தி காட்டியவர்கள்.
மனித வாழ்வின் தேடலில் உணவு,உறையுள்,உறவு போக மிஞ்சியதெல்லாம், அவனது உயிர்,உடல்,மனம் பற்றிய தேடல்களே என்றால் மிகையில்லை.அவ்வகையில் கரகம்,சிலம்பம்,கும்மி,கோலாட்டம் என அதன் வரிசையில் வருகிற எல்லாமே உடல்,உயிர்,மன தத்துவங்களை சொல்லவந்த பயிற்சி முறைகளே ஆகும்.
கரகாட்டத்தில் என்ன இருக்கிறது..?திருவிழாவின் போது, அதுவும் கிராமத்தில் மட்டும்தான் அதை பார்க்க முடிகிறது. அசிங்கமாக அறைகுறை ஆடையோடு, கொச்சையான இசையும் தாளமும் என முகம் சுழிப்பீர்கள். அதை நாம்தான் அப்படி ஆக்கிவிட்டோம். நம் பொழுதுபோக்குக்காக நாம் செய்த பாவம் அது.
நம் கலாச்சாரத்தில் கும்பம் எனும் சொல்லுக்கு அலாதியான இடம் உண்டு. பூரண்கும்ப மரியாதை என்பார்கள். கோவில் கும்பாபிஷேகம் என்பார்கள். கும்பிடுதல் எனும் வார்த்தையே ஏறக்குறைய கும்பத்தையே குறிப்பதாக கொண்டாலும் தவறில்லை. கும்பம் என்பதன் இன்னொரு அர்த்தம் முழுமை அல்லது நிறைவு என கொள்ளலாம். முழுமுதல் கடவுள் வினாயகரை பாருங்கள் கையில் அழகாக கும்பத்தை வைத்திருப்பார். வீட்டில் நடக்கும் எந்த விஷேத்திற்கும் கல்யாணம்.காதுகுத்து,புதுவீடு புகுதல்,எதுவானாலும் அப்பூஜையில் தவறாமல் இடம் பெறுவது இந்த கும்பம்தான்.
தமிழ்தொல்லுலகில் முழுமைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.எண்ணத்தில் முழுமை,செயலில் முழுமை,இன்னும் பார்வையில்,கேட்பதில், நடப்பதில்,படிப்பதில்,உறங்குவதில் என அனைத்திலுமே முழுமையான வெளிப்பாட்டை காணமுயல்வது தமிழ்தத்துவ உலகின் நோக்கம். அதன் இன்றியமையாமையை குறியீடாக எடுத்து சொல்லவே கரகாட்டம்.
கரகத்தின் அமைப்பு - ஒரு கும்பம் -அதனுள் அரிசி- அரிசி என்பது கிடைத்த உடலுக்கான வாழ்வாதாரம் - கொஞ்சம் நீர்- கொஞ்சம் மணல் - அதை மூடிவைத்த மாதிரி கவிழ்த்துவைக்கப்பட்ட தேங்காய்- தொங்கும் மாவிலைகள்- அதன் மீது பூ அலங்காரம்- உச்சியில் ஒரு கிளி பொம்மை. கரகம் தயாராகிவிட்டது. எடுத்துவைத்து ஆடும் முன் ..
இது நம்க்கு கிடைத்த உடலையும், உயிரையும், மனதையும் அதனை வைத்து நாம் வாழும் வாழ்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வை நம் தலையிலிருந்துதான் வாழ்கிறோம். நம் பிரதான தலைமை செயலகமே தலைதான்.”கொடுக்கிர தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்” என நம் நாட்டுப்புரங்களில் சொல்லும் சொலவடையை கேட்டிருப்பீர்கள். அந்த கூரை உண்மையில் நம் வீட்டு கூரையல்ல. தலை உச்சி..நம் சகஸ்ராரம். நாம் பிறந்தபோதே அது பிய்க்கப்பட்டு கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டது. தரப்பட்டதை எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் பிரச்சினை.
கிளிகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். தனியாக வரும். ஏதோ ஒரு மரத்தில் அமரும். கனிகளை கொத்தும். தனக்கு ஏதேனும் இடைஞ்சல் வருவதாய் தெரிந்தால் சிறகுகளை விரித்துவிடும். நம்க்கும் நம் தலையில் ஒரு கிளி இருக்கிறது. அதுதான் நம் உயிர் கிளி. அதுவாக பறந்துபோக நாம் விட்டுவிடக்கூடாது. “போ..போதும் பறந்துபோ “என சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால்..”போனால் போகட்டும் போடா “என்றோ,”போகுதே..போகுதே என் பைங்கிளி வானிலே”-என சோக கீதம் இசைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
நம் உடலுக்குள் வாழ்வந்த் அக்கிளியை ஆராதித்து, உரிய மரியாதை அளித்து வரவேண்டிய பயிற்சிக்குரியதே கரகாட்டம்.“உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்..”என்கிற வார்த்தையெல்லாம் ஏதோ மேம்போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.
தாயின் கருவறையிலிருந்து என்று நாம் ஜனித்தோமோ அன்றே நம் தலையின் மீது நமக்கான கரகம் ஏற்றப்பட்டுவிட்டது. நாம் வாழ்கிற வாழ்கைதான் ஆட்டம்.கரகத்தை தவறவிடுவோமா..? அல்லது..எந்த சூழல் வந்தாலும் சரி ,எழுந்தாலும்.விழுந்தாலும்,குனிந்தாலும்,பணிந்தாலும், நிமிர்ந்தாலும்,தவழ்ந்தாலும்,படுத்தாலும்,சாய்ந்தாலும், தலையே போனாலும் கரகம் விழாமல், இறை நமக்கு அளித்த அந்த முழுமையை உணர்ந்து , அதன் மூலம்- எண்ணத்தில்,செயலில்,என சகலத்திலும் முழு விழிப்போடு விளையாடி நாமாகவே கரகத்தை இறக்கி வைக்கப் போகிறோமா..?
கரகாட்டத்தை இன்னொரு முறை மனக்கண்ணில் நிறுத்தி பாருங்கள். நாம் எவ்வளவு வைழிப்போடு வாழவேண்டும் என்பதை சொல்லித் தரும்.தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்www.kvthaayumaanavan.blogspot.com

0 Comments: